Tuesday, July 13, 2010

பெற்றோரின் எதிர்பார்ப்பு




அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
அல்லாஹ் தஆலா தன் அருள் மறையில் தன்னை வணங்குமாறு கட்டளையிடுவதை அடுத்து பெற்றோரைப் பேணுமாறு அறிவுறுத்தியுள்ளான் என்பதை,

"அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்டவேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!" (17:23)

"நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."(31:14)

"மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்' என்று கூறுவான்." (46:15)

என்ற அல்குர்ஆன் வசனங்களின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல. பிள்ளைகளாகிய நாம் அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்காக நாம் எப்படி துஆக் கேட்கவேண்டும் என்றும் பின்வருமாறு நமக்குக் கற்றுத் தருகின்றான்:
"இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது,என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபைசெய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக!" (17:24)

அத்தோடு இப்றாஹீம் (அலை) அவர்கள் எவ்வாறு தமது பெற்றோருக்காக துஆ இறைஞ்சினார்கள் என்ற முன்மாதிரியையும்,
" 'எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்விகணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக' (என்று பிரார்த்தித்தார்)" (14:41 )

என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றான்.
முதுமைப் பருவத்தை அடைந்தவுடன் மனிதர்கள் தமது எண்ணத்திலும் செயல்பாடுகளிலும் மீண்டும் குழந்தைகளைப் போலவே ஆகிவிடுகின்றனர். ஒரே விடயத்தைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருத்தல், சிறுபிள்ளை போல அடம்பிடித்தல், வேண்டாம் என்று சொல்வதையே செய்ய முனைதல், தம்முடைய வேலைகளைத் தனியே செய்துகொள்ள முடியாது சிரமப்படுவதோடு, பிறரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையை அடைதல் என்பன அவற்றுள் சிலவாகும்.

இந்த நடவடிக்கைகளால் சில சமயம் பிள்ளைகளாகிய நாம் பொறுமையிழந்து அவர்களுடன் எரிந்து விழுந்திருக்கலாம்; அவர்களிடம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருக்கலாம்; அவர்களை ஒரு சுமையாகக் கருதுமளவுக்கு நமது மனம் சிலசமயங்களில் இறுகிப் போயிருக்கலாம்; ஏதாவது ஒருவிதத்தில் அவர்களின் உள்ளம் புண்படுமாறு நடந்துகொண்டிருக்கலாம். 'சீ' ('உஃப்') என்பதாகச் சடைந்து ஒரு சொல் கூட சொல்லிவிட வேண்டாம் என்ற இறை கட்டளையை மேற்கண்டவாறு நாம் மீறியிருப்போமானால், அது இறைக் கோபத்தைப் பெற்றுத்தருமல்லவா? அதற்குரிய பிராயச்சித்தம் என்ன? இதோ அதையும் கருணைமிக்க அல்லாஹ் நமக்குத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளான்:

"(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான். நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்/(உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்." (17:25)

எனவே, அவ்வாறு நம்முடைய பொறுமையிழந்த, பொடுபோக்கான செய்கைகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களிடம் மிக இதமாக,மென்மையாக, மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்ள முழுமுயற்சி எடுக்கவேண்டும்.

சரி, பெற்றோர் மரணித்தபின் காலம் கடந்துதான் நமக்கு ஞானோதயம் பிறக்கிறது, நமது பெற்றோரை நடத்திய விதம் பற்றி காலங்கடந்துதான் வருந்தித் திருந்தும் நிலை தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது நாம் என்ன செய்வது? நம்முடைய பெற்றோர்களுக்காக அதிகமதிகம் துஆ இறைஞ்சுவதோடு, அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக மஸ்ஜித் கட்ட உதவுதல், பொதுக்கிணறு அமைத்தல், கல்விக்கூடங்கள் நிறுவுதல் அல்லது அதற்குப் பங்களிப்புச் செய்தல், பின்தங்கிய மருத்துவ வசதியற்ற கிராமங்களில் மருத்துவமனை நிறுவுவதில் பங்களிப்புச் செய்தல், ஆம்பியூலன்ஸ் முதலானவற்றைப் பெற்றுக்கொடுத்தல் முதலான ஸதகத்துல் ஜாரியா எனும் நிலையான தர்மங்கள் எவற்றையேனும் செய்யலாம்.

அதுமட்டுமல்ல, நாம் பெற்றோராக இருக்கும் பட்சத்தில் நம்முடைய பிள்ளைகளின் பொருட்டு பின்வருமாறு துஆ இறைஞ்சவும் மறந்துவிடாதிருப்போமாக!

"('என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வாயாக!'" (14:40)
இனி, இணைப்பில் உள்ளதைப் பார்க்கலாமே!

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
குறிப்பு: மேற்படி ஆக்கத்திலுள்ள அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பின்வரும் மூலத்திலிருந்து பெறப்பட்டதாகும்:
http://www.tamililquran.com/

No comments:

Post a Comment