Monday, December 7, 2009

இப்ராஹீம்(அலை) அவர்கள்



இப்ராஹீம்(அலை) அவர்களின் காலச் சூழ்நிலைகள் .


ஒரு முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, யூதரோ இப்ராஹீம்(அலை) அவர்களை அறியாதிருக்க முடியுமா? நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஈராக் நாட்டில் இப்ராஹீம்(அலை) பிறந்தார்கள். அவர்கள் பிறந்த சமுதாயம் மற்றெல்லாச் சமுதாயத்தை விட முன்னேறிய சமுதாயமாகமும், மற்றெல்லாச் சமுதாயத்தைவிட வழிகெட்ட சமுதாயமாகவும் இருந்தது. கல்வி, கலைகள் தொழில்கள் முதலியவற்றில் அச்சமுதாயம் முன்னேறியிருந்தது.
ஆயினும் படைக்கப்பட்ட ஒன்று வணக்கத்திற்குறிய தகுதியைப்பெற முடியாது எனும் சிறிய விஷயத்தை அச்சமுதாயம் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்தது. அவர்கள் வின்மீன்களுக்கும், சிலைகளுக்கும் வழிபாடு நடந்து கொண்டிருந்தார்கள். ஜோதிடம், ஆருடம், மர்மத்தை கூறுதல், மந்திரம் தாயத்து ஆகியவை அவர்களிடையே அதிகம் பரவி இருந்தன. மாற்று மதங்களில் பண்டிதர்களும், புரோகிதரர்களும் இருப்பதைப் போல் அந்தக் காலத்திலும் ஒரு பூசாரி வர்க்கம் இருந்தது.
அந்த வர்க்கத்தினர் கோயில்களில் மக்களுக்காக பூஜைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். கல்யாணம் கருமாதி முதலிய சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். இவை தவிர மறைவான செய்திகளை மக்களுக்கு கூறுவதாக பாசாங்கு செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களின் மோசடியில் சிக்கிக் கொண்டிருந்தர்கள்.
இந்தப் பூசாரிகளுக்கு தேவ தேவதையிடம் செல்வாக்கு இருக்கிறது; இவர்கள் விரும்பினால் தேவ தேவதைகளின் சலுகை நமக்கு கிடைக்கும் இல்லையென்றால் நாம் அழிந்துவிடுவோம் என என்னி மக்கள் பூசாரிகளின் விருப்பங்களுக்கேற்ப அடிபணிந்து கிடந்தார்கள். இந்த பூசாரிகளும், குருக்களும், அரசர்களும் தங்கள் நோக்கங்களுக்காக நெருங்கிப் பழகி வந்தனர். பொதுமக்களை தமக்கு அடிமைகளாக்கிக் கொள்வதில் அரசர்கள் குருக்களுக்கும், குருக்கள் அரசர்களுக்கும் உதவியாளர்களாக இருந்தார்கள். ஒருபுறம் அரசாங்கம் இந்த குருக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தது. அதற்கு பிரதிபலனாக தற்போதைய அரசனும் கடவுள்களில் ஒரு கடவுள்தான் என்றும் நாட்டுக்கும் குடிமக்களுக்கும் அரசன் அதிபதி என்றும் அவனது சொல்லே சட்டம் என்றும் மக்களின் உயிரிலும், பொருளிலும் எல்லா உரிமைகளும் அவனுக்கு உண்டு என்றெல்லாம் இந்த குறுக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இது மட்டுமல்ல மக்களின் உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் அரசனின் தெய்வத்தன்மை பற்றிய நினைப்பு வரவேண்டும் என்பதற்காக அரசர்களுக்கு எதிரில் காலில் விழுந்து பணிய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் அந்தப் பூசாரிகள் ஏற்படுத்தி நடத்திகொண்டிருந்தார்கள். இப்ராஹீம் அவர்களின் குடும்பம் இப்படிப்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் பிறந்தார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் அவர்கள் பிறந்த குடும்பம் பூசாரிகளின் குடும்பம்தான்.
அவர்களின் மூதாதையர்கள் தமது சமுதாயத்துக்கு பண்டிதர்களாக பூசாரிகளாக இருந்தனர். அவர்களின் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருந்த தட்சிணைகள், காணிக்கைகள், அன்பளிப்புகள் மாமூல்கள் இவருக்கும் காத்துக் கொண்டிருந்தன. அவர்களுக்கு முன்னால் மக்கள் கைகட்டிக் கொண்டு பக்தியோடு சிரம் தாழ்த்துவதற்கு காத்திருந்தார்கள். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் சாதாரண மனிதரல்லர். கருத்தறியும் வயது வந்தவுடனே அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவை அடிமைகளைப் போல சுழலுகின்றன.
உருவாக்கப்பட்ட சிலைகளும் மனிதனாக இருக்கும் அரசனும் எப்படி இறைவனாக இருக்கமுடியும்?
விண்ணிலும் மண்ணிலும் நமக்கு தோற்றமளிக்கிற அல்லது நமக்கு தெரிந்திருக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும் மற்றவைகளின் சக்திக்கு சார்ந்து இருப்பவை. என்றைக்காவது இவை அழியக்க்கூடியவையே. அவற்றில் எதுவும் என்னைப் ப்டைக்கவில்லை. என் வாழ்வும் மரணமும் இலாபமும் நட்டமும் அவற்றில் எதன் கையிலும் கிடையாது. அவற்றிற்கு முன்னால் நான் ஏன் அடிபணிந்து சிரம் தாழ்த்தவேண்டும்? இப்படி சிந்தித்த இப்ராஹீம்(அலை) அவர்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்கள். எனது சமுதாயத்தவர் வணங்குகிற தெய்வங்களை கண்டிப்பாய் வணங்க மாட்டேன் என்று வந்த பிறகு அவர்கள் பகிரங்கமாக மக்களிடம் இப்படி கூறிவிட்டார்கள்.
إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُون
நீங்கள் இறைவனுக்கு இணை வைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். (6:78)إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ
வாணங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒரு மனத்துடன் என் முகத்தை நான் திருப்பி விட்டேன்; மேலும் ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்லன். (6:79) இதற்கு பிறகு இப்ராஹீம் (அலை) அவர்களை துன்பவெள்ளங்கள் பெருகி வந்து மோதின. சொத்துரிமை பரித்துவிடுவேன், வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன் என்றார் தந்தையார். அடைக்கலம் தரமாட்டோம் என்றனர் ஊர்மக்கள். சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு பணியாமல் அவர்களுக்கு பதில் கொடுத்திடும் வகையில் சிலைகளை போட்டு உடைத்தனர். பிரமுகர்கள் குழுமிய அரசவைக்குச் சென்று அரசனைப் பார்த்து தெளிவாகக் கூறினர்கள். நீ என்னை பரிபாலிக்கும் இறைவன் அல்ல; மாறாக நம் இருவருடைய வாழ்வும் சாவும் எவனுடைய கையில் இருக்கின்றனவோ அவனே என்னையும் உன்னையும் பரிபாலிக்கும் இறைவனாவான். அரசவையில் இருந்து தீர்ப்பு வந்தது.
இவரை உயிரோடு எரித்துவிட வேண்டும். ஆனால் இப்ராஹிம் நபி அவர்கள் உறுதியான உள்ளத்தை பெற்றிருந்த அவர்கள் இந்தப் பயங்கர தண்டணையை ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களை நெருப்பு குண்டத்திலிருந்து காப்பாற்றினான். பிறகு அவர்கள் தமது குடும்பத்தார் நாடு அனைத்தையும் துறந்துவிட்டு தமது மனைவியையும் சகோதரன் மகனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தாயகத்திலிருந்து புறப்பட்ட இபுராஹீம்(அலை) அவர்கள் நாடுகள் பல அழைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் இடத்திலும் அதே பூசாரி பீடம் தான் இருந்தது.
தம்மை தெய்வங்கள் என சொல்லிக் கொள்ளும் அரசர்கள் தாம் இருந்தார்கள். இந்த பொய்த் தெய்வங்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் அதே அறிவற்ற மக்கள்தாம் ஒவ்வோர் இடத்திலும் வசித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த எஜமானும் கிடையாது;
மற்ற எல்லோருடைய பொய் தெய்வங்களை புறக்கணியுங்கள்; இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிமையாகி விடுங்கள் என மக்களிடம் வெளிப்படையாக கூறித் திரிந்தார். அவர்கள் வாழ்நாள் இறுதிக் கட்டத்தை அடைந்த போது வயதோ என்பதாயிற்று குழந்தையும் கிடையாது இந்தச் சமயத்தில் இறைவன் குழந்தை அருளினான். தமது வாழ்நாள் இப்படிக் கழிந்து விட்டது நமது சந்ததியினருக்காவது இருக்க இடமும் செழிப்பும் பெற்று வாழட்டும் அதற்கு ஓர் வழி செய்வோம் என்ற எண்னம் அந்த அடியாருக்கு இந்த நிலையிலும் கூட ஏற்படவில்லை.
எந்த இயக்கத்தை பரப்புவதற்கென்று என் வாழ்நாள் முழுதும் செலவிட்டேனோ அதனை என்னுடைய மரணத்திற்கு பின்னும் பரப்பிக் கொண்டிருக்க ஒருவர் கிடைக்க வேண்டும் என்பதாகவே அவர்களின் லட்சியமாக இருந்தது.
இந்த முழுமையான மனிதரின் வாழ்க்கை உண்மையான முஸ்லிமின் வாழ்க்கையாக இருந்தது.இளமையின் துவக்கத்தில் தமது இறைவனை உணர்ந்து தெளிந்தபோது அவர்களுக்கு இறைவன் "நீர் முஸ்லிமாகி விடுவீராக! எனச் சொன்னான். அதற்கு அவர்கள் அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் (கீழ்ப்படிந்த) முஸ்லிமாகி விட்டேன்" என வாக்குறுதி அளித்தார்கள். இந்த வாக்குறுதியை தன் வாழ்நாள் முழுதும் முறைப்படி நிறைவேற்றினார்கள். அகிலங்களை பரிபாலித்து காக்கும் இறைவனுக்காக அவர்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்த முன்னோர்களின் மார்க்கத்தையும் கொள்கைகளையும் கைவிட்டார்கள்.
பூசாரியாக இருந்திருந்தால் கிடைத்திருக்கும் உலக லாபங்கள் அனைத்தையும் இழந்தார்கள். தமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் தாயகத்தையும் துறந்தார்கள். தம் வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் இறைவனின் மார்க்கத்தை பரப்புவதற்கே செலவிட்டார்கள்.
வயோதிகத்தில் குழந்தைச் செல்வம் கிடைத்தபோது அந்த குழந்தைக்கும் இந்த மார்க்கத்தையே இந்தப் பணியையே தேர்ந்தெடுத்தார்கள். இப்ராஹீம் நபியவர்களிடம் உலகத் தலைமை ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமிய இயக்கத்தின் தலைவராக்கப்பட்டார். அப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று நிலையாக இப்பணியை மேற்கொள்ள மூவர் கிடைத்தனர்.
ஒருவர் அவர்களின் சகோதரரின் மகன் லூத்(அலை) அவர்களை கிழக்கு ஜோர்தானுக்கு அனுப்பி வைத்தனர். அந்தச் சமுதாயம் திருந்துவதற்காகவும் மார்க்கத்தை பரப்புவதற்காகவும் சகோரனின் மகனை நியமித்தார்கள். இளைய மகன் இஸ்ஹாக்(அலை) அவர்களை கன்ஆன் பகுதியில் நியமித்தார்கள். இந்தப் பகுதி பாலஸ்தீனம் எனக் கூறப்படுகிறது. மூத்த மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை ஹிஜாஸில் 'மக்கா' எனும் ஊரில் நிலைப்படுத்தினார்கள்.
குறிப்பிட்ட காலம் தாமே அவர்களோடு இருந்து தந்தையும் மகனும் கஃபா எனும் இறை ஆலயத்தை எழுப்பினார்கள். இந்த இடத்தை இறைவனே தேர்ந்தெடுத்தான். ஒரே இறைவனை நம்புகிறவர்கள் உலகின் எல்லா இடங்களிலிருந்தும் இங்கு கூடி இறைவனை வணங்கவேண்டும் என்பதற்காகவே கஃபா நிறுவப்பட்டது.إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّـنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا
திண்ணமாக மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும் அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமகவும் அது உள்ளது. அங்கு தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகிறார். அல்குர்ஆன் (3:96,97)


தொடரும்....


நன்றி : ரீட்இஸ்லாம்.நெட்

No comments:

Post a Comment