Saturday, November 7, 2009

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள் :


இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -
 
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -

 ‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)

 முதியவரின் இளமை: -

 “முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -

 “மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி

நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -

 இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி

 பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: 

இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
Thanx to tamilislam.webs                                                                                                     cont....

No comments:

Post a Comment