Part 2:
மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -
‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி
செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: -
“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி
நம்முடைய செல்வம் எது?
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி
மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -
‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -
“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
நன்றியுள்ள அடியாரின் செயல்: -
நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி
விசாலமான அருட்கொடை எது?
அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)
அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி
சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!
“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி
அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி
Thanx: Tamilislam.webs Cont....
No comments:
Post a Comment